Saturday, December 10, 2011

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு.. இதில் திமுக-வும் உடந்தையா..?



மத்திய அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை நிறைவேற்றாமல், தமிழக அரசிற்கு உரிய நிதியை ஒதுக்காமல், பாரபட்சம் காட்டுவதும், பாராமுகமாகவே இருப்பதும், வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

மாநில அரசிடமிருந்து வரும் வருவாய் மட்டும் பெற்றுக் கொண்டு, தக்க சமயத்தில் போதுமான நிதி தராமல், பல வகையில் இழுத்தடிப்பது சரியல்ல. காங்கிரஸ், தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள், ஆளும் மாநிலங்களுக்குத் தேவையான நிதியை அள்ளித் தருகிறது. ஆனால், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, தேவையான நிதியை ஒதுக்காமல், பாரபட்சமாக செயல்படுகிறது. 

நேரடியாகவும், மறைமுகமாகவும் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசுக்கு வருவாய், பல வகை வரிகளின் மூலமாக கிடைக்கிறது. இதை வேண்டாம் என்று சொல்ல, மத்திய அரசு முன் வருமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ், மாற்றாந்தாய் மனப்பக்குவம் கொண்டிருப்பதால், தமிழகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மத்தியில் நிதி அமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜியோ, "காங்கிரஸ் மாற்றாந்தாய் மனப்பக்குவத்தோடு செயல்படவில்லை' என்று கூறி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். 

அவர் கூறியதை, தமிழக மக்கள் நம்பத் தயாராக இல்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வரலாறு காணாத வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களும், சுனாமி போன்ற பேரழிவுகளும் ஏற்பட்டன. ஆனால், அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தமிழகத்திற்கு உரிய நிதியைத் தராமல் வஞ்சித்து விட்டன. 

மேலும், வறட்சி மற்றும் வெள்ள நிவாரணக் குழு, தமிழகத்தைப் பார்வையிடவே வரவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்திவிட்டு, "மங்களம்' பாடிவிட்டன. இதற்கு, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் உறுப்பினரும், நிதி அமைச்சரும் உடந்தை என்பது மிகவும் வேதனையான ஒன்று. 

மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற போதிலும், மத்தியில் ஒட்டிக்கொண்டு, அழையா விருந்தாளியாக இருந்து கொண்டு, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருப்பது, தமிழனே தமிழனுக்கு எதிரியாக இருப்பதாகவே தோன்றுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி ஏற்பட்டால், இணக்கமான சூழல் ஏற்படும். "தேனாறும், பாலாறும் ஓடும்' என்று வாய்ச்சவடால் பேசி, ஆட்சியை மக்களுக்கு விரோதமாகவே நடத்தியதை, மக்கள் மறக்கவில்லை. 

தமிழகத்தின் கடனை, லட்சம் கோடியாக உயர்த்திவிட்டதையும், கஜானாவை துடைத்து வைத்துவிட்டு, தங்களுடைய கஜானாவை நிரப்பிக்கொண்டதையும், யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. மத்திய அரசு, கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் செயல்பட்டு, தமிழக அரசுக்கு நியாயமாகத் தர வேண்டிய நிதியைத் தராமல், வஞ்சம் செய்தால், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி கட்டாயம் காணாமல் போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம். 

மாற்றாந்தாய் மனப்பக்குவத்தை மாற்றிக்கொண்டு, கேட்பார் பேச்சைக் கேட்டு, கெட்டுப் போகாமல், தங்கள் மிச்சம் மீதி கவுரவத்தை, காங்கிரஸ் காப்பாற்றிக் கொள்ளுமா?

No comments:

Post a Comment

my blog recent