Sunday, January 15, 2012

எம்.ஜி.யார் பாணியில் விஜய்


நண்பன் திரைப்படம், வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சில திரைப்படங்கள் விஜயை வேறொரு களத்திற்கு அழைத்து செல்லும் வகையில் அமைந்திருக்கும்.  பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, திருமலை போன்ற படங்களுக்கு பிறகு விஜய் தனது பயணத்தை மாற்றிக் கொண்டிருப்பார். நண்பனும் அது போன்ற ஒரு படம்தான்.  ஆனால் நண்பன் போன்ற கதையை எழுதும் ஆட்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் வாழும் விஜய் கதாபாத்திரம் தமிழுக்குப் புதுசு. விஜய் ரசிகர்கள் சிலராவது ஆல் ஈஸ் வெல் என்று சொல்லிக் கொண்டு சுற்றினால் அதுவே மிகப் பெரிய வெற்றிதான்.  கருப்பு வெள்ளைக் காலத்து எம்.ஜி.ஆர் படங்களில் சில, பல தத்துவங்கள் எம் ஜியாரால் ரசிகர்களுக்கு திணிக்கப் பட்டு இருக்கும். ரசிகர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதன் பால் ஈர்க்கப்பட்டு இருப்பார்கள். அது போலத்தான் ஆல் ஈஸ் வெல்.  எப்படியோ நல்லது நடப்பதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

விஜய்க்கு பன்ச் டயலாக் இல்லை. எண்ட்ரி சீன் இல்லையென்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.  ஆல் ஈஸ் வெல்லைவிட என்ன ஒரு பன்ச் டய்லாக் வேண்டும்.  விஜய்யின்  எண்ட்ரி சீன் சொல்கிறதே படித்ததை வாழ்க்கையில் உபயோகித்து வாழ்பவர் என்று.  இதைவிட பவர்ஃபுல் எண்ட்ரி சீன் இதுவரை விஜய் படங்களில் வந்ததே இல்லை என்றுதான் சொல்லுவேன்.  காட்சிக்கு காட்சி  விஜய் ஒரு மாபெரும் பராக்கிரமசாலியாகவே காட்டப் படுகிறார்.  சக மாணவர்களுக்காக பொங்கி எழுவதிலும், அவர்களால் ஒரு வருடம் முழுவதும் செய்ய முடியாததை ஒரே நாளில் செய்து முடிப்பது ஆகட்டும், நண்பர்களுக்காக எதையும் செய்பவராக ஆகட்டும். முதலாளிக்காக அனைத்தையும் இழந்துவிட்டு செல்லும்போது. முதலாளிக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டாலும் விஜய் நிமிர்ந்து நிற்கிறார்.  விருப்பப்பட்டு படித்தால் சொந்தக்காலில் சந்தோஷமாக நிற்க்கலாம் என்ற கருத்து அற்புதமாக சொல்லப் பட்டு இருக்கிறது.  அமெரிக்காவில் போய் பேங்க் வேலை செய்வதற்கு எதற்கு என்சினியரிங், படிக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்? ( கேள்வி இந்தியில் எழுப்பப் பட்டு ஷ்ங்கரால் தமிழ் படுத்தப் பட்டிருந்தாலும் இந்தக் கேள்வி ஜீவாவோ, ஸ்ரீகாந்தோ கேட்டிருந்தால் அது நம் காதில் கூட விழுந்திருக்காது)

இது போன்ற வலிமை வாய்ந்த ஹீரோ பாத்திரம் இனிமேல் விஜய்க்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய்க்கு மட்டுமல்லாது எல்லா ஹீரோக்களுமே இது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.



அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கருத்து சொல்லப் படுகிறது, அதுதான் விஜய் முதல் மாணவனாக வரும் விதம். எத்தனை விஜய் ரசிகர்கள் அதை கவனிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒருவர் கவனித்துப் பயன் பெற்றாலும் மகிழ்ச்சியே..,

அடுத்ததாக கருத்துப் புரியாமல் மனனம் செய்து தேர்வு எழுதும் மாணவர்களை கண்டபடி கலாய்த்து இருந்தாலும் அந்த மாணவனும் நிறைய சம்பாதித்து தனக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வதாகவே காட்டி இருக்கிறார்கள்.  அனைத்து விதங்களிலும் நண்பன் ஆல் ஈஸ் வெல்..,

===========================================================================

என்றே முடித்து விடுவதுதான் நல்லது. இல்லியானாவை பற்றி எது பேசினாலும் அது எதிர்மறையாகத்தான் அமையும்.  விஜய் போன்ற ஒரு மிகச்சிறந்த மாணவனுக்கு  இல்லியானாவைப் போன்ற மிக மிக சுமாரான ஜோடிதான் அமையும் என்று  நிதர்சனைத்தைக் காட்டுகிறார்கள்.  இல்லியானாவை  ஆந்திராவில் நம்பர் ஒன் என்கிறார்கள்.  விஜயசாந்தி, ரம்யாகிருஷ்ணா , அனுஷ்கா வரிசையில் இல்லியானா என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.  சாப்பாட்டில் எல்லாமே இனிப்பாக இருந்தால் திகட்டிவிடும் அல்லவா,  அது போலதான் இந்தப் படத்தில் இலியானாவும்.

No comments:

Post a Comment

my blog recent