உலக மக்கள் தொகை எண்ணிக்கை 700 கோடி: இந்தியாவில் மட்டும் 121 கோடி
லக்னோ:உலகின் மக்கள் தொகை, நேற்று, 700
கோடியை எட்டியது. இந்தியாவில், 700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக,
பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. பிலிப்பைன்சும்,
ரஷ்யாவும் தங்கள் நாட்டில், 700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக
அறிவித்துள்ளன. இதனால், எந்த நாட்டில், 700 கோடியாவது குழந்தை பிறந்தது
என்பதை, யாரும் அறுதியாகக் கூற முடியாத குழப்பம் நிலவுகிறது.
கடந்த, 1800ல், 100 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை, 1900ல், 160
கோடியாகவும், 2000ல், 610 கோடியாகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த,
20 ஆண்டுகளில், மக்கள் தொகை, 200 கோடி அதிகரித்துள்ளது.ஐ.நா., அறிக்கை:ஐ.நா., சமீபத்தில் விடுத்த அறிக்கையில், அக்டோபர் 31ம் தேதி (நேற்று) உலக மக்கள் தொகை, 700 கோடியை எட்ட இருப்பதாகத் தெரிவித்தது. 700 கோடியாவது குழந்தை, உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பிறக்கலாம் என ஐ.நா., கூறியது."கவுன்ட் டவுன்': இதையடுத்து, பல நாடுகளிலும், 700 கோடியாவது குழந்தையை வரவேற்க, தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.ரஷ்யாவில், 700 கோடியைக் குறிக்கும் வகையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
உ.பி.,யில், 700 கோடியாவது குழந்தை: இந்நிலையில், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், தனாவுர் கிராமத்தில் உள்ள மால் பகுதியில், 700 கோடியாவது குழந்தை பிறந்தது. நேற்று காலை, இந்திய நேரப்படி, 7.20 மணிக்கு, நர்கீஸ் என்ற பெண் குழந்தை பிறந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை நல அமைப்பான, "பிளான் இந்தியா'வின் இயக்குனர் பாக்யஸ்ரீ டெங்லே இதை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விவசாயி அஜய்,25, அவரது மனைவி வினிதா,23 ஆகியோருக்கு முதல் குழந்தையாக நர்கீஸ் பிறந்திருக்கிறாள். அவள், உலகின், 700 கோடியாவது குழந்தை என வரவேற்கப்படுகிறாள்" என்றார்.
இதையடுத்து, "பிளான் இந்தியா' அமைப்பு நேற்று மால் பகுதியில் விழா நடத்தி மகிழ்ச்சியைக் கொண்டாடியது.அதேநேரம், மால் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை 8 மணிக்குள் மேலும் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் நான்கு பேர் ஆண் குழந்தைகள்.இவர்களும் இந்தநாளில் பிறந்ததால், முக்கியத்துவம் பெறுகின்றனர்.இந்தியாவில் தினசரி பிறக்கும், 51 குழந்தைகளில், 11 குழந்தைகள் உ.பி.,யில் தான் பிறக்கின்றன. அதேநேரம், அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகளவில் நடக்கின்றன. ஆகவே, இங்கே பிளான் இந்தியா அமைப்பு அக்கறை காட்டியது.
நர்கீசின் தந்தை அஜய் கூறியதாவது:நாங்கள் இருவருமே பெண் குழந்தையைத் தான் விரும்பினோம். எங்கள் சமுதாயத்தில் பெண் குழந்தை தேவியின் (பார்வதியின்) அம்சமாகக் கருதப்படுகிறது. நர்கீஸ் எதிர்காலத்தில் படித்து டாக்டராக வரவேண்டும் என விரும்புகிறோம். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான அவளது வளர்ப்புச் செலவுகள் அனைத்தையும் சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.நர்கீஸ் பிறந்ததைக் கொண்டாடும் வகையில் , பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வேன். இவ்வாறு அஜய் தெரிவித்தார்.
பிலிப்பைன்சில்... பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ப்ளோரன்ட் கமாச்சோ-கமில் கலுரா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை, பிலிப்பைன்ஸ் நேரப்படி, ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு, 12 மணிக்கு, சில விநாடிகள் முன்பாக பிறந்துள்ளது.டைனிகா மே கமாச்சோ எனப் பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை தான், உலகின், 700 கோடியாவது குழந்தை என, பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்தது.இதையடுத்து, ஐ.நா., அதிகாரிகள் டைனிகாவை நேரில் பார்த்தனர் தொடர்ந்து பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அக்குழந்தைக்கு பரிசுகள் பல அளித்தன. குழந்தையின் தந்தை தற்போது மினிபஸ் ஓட்டுனராக வாழ்க்கையை கழித்து வருவதால், அவர் பலசரக்குக் கடை திறக்க உதவி செய்யும் வகையில் நிதியுதவியும் நேற்று அளிக்கப்பட்டது.
ரஷ்யாவில்... இந்தியா, பிலிப்பைன்சைத் தொடர்ந்து ரஷ்யாவும், 700 கோடியாவது குழந்தை தங்கள் நாட்டில் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெட்ரோபவ்லோவ்ஸ்க் - கம்சட்ஸ்கி நகரில், அலக்சாண்டர் என்ற ஆண் குழந்தை, 700 கோடியாவது குழந்தையாகப் பிறந்துள்ளதாக, கம்சட்கா மாகாணத்திற்கான அதிபரின் தூதர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் கணவன், மனைவிக்கு ஒரே குழந்தை என்ற கட்டுப்பாடு தொடரும் என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்த நிலையில், 121 கோடி மக்கள் தொகையுடன், இந்தியா உள்ளது. தற்போது அதிக மக்கள் தொகையால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்க, இந்த நாள் நமக்கு நினைவூட்டியிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கணக்கு சரியா?உலகம் முழுவதும் மக்கள் தொகையை மிகச் சரியாக கணிப்பதற்கான அளவு கோல்கள் எந்த நாட்டிடமும் இல்லை என்பதால், 700 கோடியாவது குழந்தை எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குழப்பம் குறித்து ஐ.நா., மக்கள் தொகைப் பிரிவு தலைவர் கெர்ஹார்டு ஹெய்லிக் கூறுகையில், "உலகின் குறிப்பிட்ட இடத்தில் தான், 700 கோடியாவது குழந்தை பிறக்கும் எனக் கூறுவது சரியாக இருக்க முடியாது. காரணம் சரியான புள்ளிவிவரங்கள், வசதிகள் கொண்ட நாடுகள் மிகவும் குறைவு. ஆகவே, மிகச் சரியாக கணிக்கவே முடியாது' என்றார்.
பாவம்! இந்த நாடுகள்!!ஆப்கானிஸ்தான், அங்கோலா, மியான்மர், காங்கோ குடியரசு, எரித்ரியா, ஐஸ்லாந்து, லெபனான் ஆகிய நாடுகள், கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் தொகைக் கணக்கே எடுக்கவில்லை.அதேபோல், சோமாலியா, உஸ்பெகிஸ்தான், மேற்கு சகாரா, லெபனான், டச் கரீபியன் போன்ற நாடுகள், தங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளை ஐ.நா.,விற்கு பல ஆண்டுகளாக அனுப்பவில்லை.இதுபோன்ற பல சிக்கல்களால், உலகின் மொத்த மக்கள் தொகையைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.
உங்களுக்கான உலக "நம்பர்'வேண்டுமா?மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. www.7billionandme.org என்ற அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி கொடுக்க வேண்டும்.இந்தத் தகவல்களை நிரப்பிய உடன் உங்களுக்கான, "நம்பர்' கிடைக்கும். இது, உலகத்தில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதைக் குறிக்கும் எண்.ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட் பிரின்ட் உள்ளிட்ட ஐ.நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த எண் உங்களுக்கு வழங்கப்படும்.எந்தெந்த ஆண்டுகளில் அல்லது தேதிகளில் உலகத்தின் மக்கள் எண்ணிக்கை எந்தத் தொகையைத் தொட்டது என்பதையும் இந்த இணையதளம் மூலம் நீங்கள் அறிய முடியும். உதாரணத்திற்கு, உலக மக்கள் தொகை, 594 கோடியே, 95 லட்சத்து, 6,870 பேராக ஆன போது, இந்த உலகில் இருந்து, 9 லட்சத்து, 9,804 உயிரினங்கள் அழிந்து போனதாக இந்த இணையதளம் தகவல் தருகிறது.இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களையும் இதில் நீங்கள் பெறலாம்.
No comments:
Post a Comment