Saturday, December 31, 2011

தமிழ் சினிமா 2011 - ஒரு சிறப்பு பார்வை!




தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. 2011 ஆண்டு வெளியான படங்களில் எது எல்லாம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றன என்பது குறித்து ஒரு பார்வை :

காவலன் : 'பாடிகார்ட்' மலையாள படத்தின் தமிழ் ரீமேக். கமர்ஷியல் படங்களிலேயே விஜய்யை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன மாற்றம். நீண்ட நாட்கள்.. இல்லை.. நீண்ட மாதங்கள் கழித்து, கமர்ஷியல் மசாலாக்கள் குறைத்து, காமெடி கலந்த வேடத்தில் விஜய் நடித்த படம். பட வெளியீட்டிற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் தடைகளை தாண்டி வெளிவந்து வரவேற்பை பெற்ற படம்.


ஆடுகளம் : தனுஷின் எதார்த்தமான நடிப்பு, வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை அமைப்பு என இரண்டும் ஒரு சேர கலந்ததால் மக்களிடமும், திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த எடிட்டர் (T.E.கிஷோர் ) என இப்படத்திற்கு மூன்று தேசியவிருதுகளைக் கொடுத்து கெளரவித்தது மத்திய அரசு.

சிறுத்தை : 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். போலீஸ் அதிகாரி, திருடன் என முதன் முறையாக கார்த்தி இருவேடங்களில் நடித்த படம். கார்த்தியின் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, வேகமான திரைக்கதை அமைப்பு ஒன்றிணைந்த படம். வரவேற்பு மற்றும் வசூல் என இரண்டிலும் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்த படம்.


பயணம் : விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொன்ன திரைக்கதை. ஒரு ஹைஜாக் படத்தில் காமெடியை சரியான இடத்தில் கலந்தது ராதாமோகனின் டச். 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு நாகர்ஜுனா நடித்த தமிழ் படம்.

குள்ளநரி கூட்டம் : நான்கு இளைஞர்கள் எப்படி போலீஸ் அதிகாரிகள் ஆகிறார்கள் என்ற கதையை நகைச்சுவையுடன் சொன்ன படம். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்த படம். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திற்குப் பிறகு விஷ்ணுவுக்கு அமைந்த வெற்றிப்படம்.

பொன்னர் சங்கர் : கலைஞரின் வசனம், தியாகராஜன் அருமையான இயக்கத்தில் வெளிவந்தது பொன்னர் சங்கர். கிராபிக்ஸ் காட்சிகளா என்பது தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு என இரண்டுமே அமைந்தது இப்படத்தின் ப்ளஸ். பிரஷாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த படம்.

கோ : கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளியான படம். பத்திரிக்கை புகைப்பட கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த படம். கே.வி.ஆனந்த, சுபா என மூவரின் திரைக்கதை அமைப்பு, கே.வி.ஆனந்தின் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என மூன்றுமே மக்களிடம் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது.

வானம் : ' வேதம்' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். ஐந்து தனித்தனி கதைகள் ஒருகட்டத்தில் எல்லாம் ஒன்றாக இணைய, க்ளைமாக்ஸ் என்ற திரைக்கதை அமைப்பில் வெளிவந்த படம். ஐந்து கதைகளில் ஒரு கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தது தான் இப்படத்தின் ஹைலைட்.

அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தியின் சிறுகதையை படமாக வடிவமைத்து சுசீந்திரன் இயக்கிய படம். எதார்த்தமான பாத்திர படைப்புகள், திரைக்கதை அமைப்பு என திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற படம்.

ஆரண்ய காண்டம் : ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலை சதிப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’. திரைக்கதை அமைப்பு, ஷார்ப்பான வசனங்கள் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டிய படம். வெளிவரும் முன்னே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்தது. யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை, வினோத் ஒளிப்பதிவு என அனைத்து தரப்பினரின் உழைப்பு தான் இப்படத்தின் விருதுகளுக்கு காரணம்.

தெய்வத்திருமகள் : அஞ்சு வயசுப் பெண்ணின் அப்பாவுக்கும் அஞ்சு வயசு என்றால் என்ன ஆகும் என்பதை அழகாக காட்டிய படம். விக்ரமின் நடிப்பு, குழந்தை நட்சத்திரம் சாராவின் மழலை கொஞ்சும் நடிப்பு என தமிழக மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம். ஜி.வி.பிரகாஷ் இசை, இயக்குனரின் விஜய்யின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு இவ்விரண்டுமே இப்படத்திற்கு பலமாக அமைந்தது.

காஞ்சனா : தன் கனவைச் சிதைத்த வில்லன்களை லாரன்ஸின் உடலில் புகுந்து பழி தீர்க்கும் திருநங்கை ஆவி... 'காஞ்சனா’!. லாரன்ஸ் கதை, திரைக்கதை அமைப்பு, கோவை சரளா காமெடி என மக்களை ரசிக்க வைத்தப் படம். படம் பார்த்தவர்கள் ஒன்று, ஆவியைப் பார்த்துச் சிரிப்பார்கள். அல்லது திருநங்கைகளைப் பார்த்தால் மரியாதை கொடுப்பார்கள். இந்த இரண்டுமே 'காஞ்சனா’வுக்குக் கிடைத்த வெற்றிகள்!

வெங்காயம் : ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!

மங்காத்தா : கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’! 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட 'தல’ சினிமா!. அஜீத் 50வது படம், அஜீத்தின் வில்லத்தனமான நடிப்பு, வெங்கட்பிரபு திரைக்கதை அமைப்பு, யுவனின் இசை என தமிழக மக்களிடம் வரவேற்பையும் கல்லா நிறைய காசையும் அள்ளிக் கொடுத்த படம்.

எங்கேயும் எப்போதும் : எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக்கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளாராகவும் ஆனார்.

வாகை சூட வா : மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாத 1960-கள் காலகட்டம். 'கண்டெடுத்தான்காடு’ என்கிற கிராமம். செங்கல் சூளைக் கூலிவேலைதான் அங்கு பிழைப்பு. படிப்பறிவு இல்லாக் கூட்டத்தைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார் முதலாளி. அங்கு வாத்தியாராக வரும் விமல், குழந்தைகளைக் கல்விப் பாதைக்கு இழுக்க முயற்சிக்கிறார். அது உண்டாக்கும் சலசலப்பு கிராமத்துக்கே ஒரு விடியலை உண்டாக்குகிற கதை! 'களவாணி' சற்குணம் இயக்கி இருந்தார்.

சதுரங்கம் : நேர்மையான நிருபர் ஸ்ரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக்கள் எனப் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியாவைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது 'சதுரங்கம்’. கரு.பழனியப்பன் இயக்கத்தில் படம் தயாராகி, பல மாதங்கள் கழித்தே வெளியானது இப்படம்.

வேலாயுதம் : நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்! விஜய் நடிப்பு, ஜெயம் ராஜாவின் திரைக்கதை, விஜய் ஆண்டனி இசை, சந்தானத்தின் காமெடி, என அனைத்து கலந்து மக்களிடன் வரவேற்பை பெற்ற படம்.


ஏழாம் அறிவு : சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி! ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை அமைப்பு, ரவி. கே.சந்திரனின் ஒளிப்பதிவு, சூர்யா மற்றும் JOHNNYயின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே கலந்து மக்களிடம் வரவேற்பை பெற்ற படம். ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.


மயக்கம் என்ன : காதல், லட்சியம் இரண்டிலும் மனசு சொல்கிற திசையில் செல்லும் ஒருவன் கரை சேர்ந்தானா என்று சொல்லும் 'மயக்கம் என்ன’! செல்வராகவனின் திரைக்கதை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, தனுஷின் நடிப்பு, ஜி,வி.பிரகாஷின் துள்ளல் மிகுந்த பாடல்கள் என அனைத்தும் ஒருங்கே அமைந்து இளைஞர்கள் கொண்டாடிய படம்.

பாலை : வடக்கில் இருந்து வந்த கூட்டம் ஆயக்குடியைக் கைப்பற்றி, தமிழர்களைத் தாய் நிலத்தில் இருந்து துரத்துகிறது. அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு முல்லைக்குடி என்று பெயர் சூட்டி, அங்கு வாழத் தொடங்கும் தமிழர்கள் பாலையின் பஞ்சத்தையும் எதிரிகளையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை!

போராளி : பகை தீர்க்கத் துரத்தும் மனித விலங்குகளிடம் இருந்து வாழ்க்கையைக் காப்பாற்றப் போராடும் 'போராளி’!. சமுத்திரக்கனியின் திரைக்கதை, சசிக்குமார் நடிப்பு மற்றும் தயாரிப்பு, கஞ்சாகருப்பு மற்றும் சூரியின் காமெடி என மக்களிடம் வரவேற்பை பெற்ற படம்.

மெளனகுரு : போலீஸ் நினைத்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து, ஒரு சாதாரணனை என்ன பாடுபடுத்த முடியும் என்பதே மௌன குரு. ஒரு சாதாரணக் கதையை செம சஸ்பென்ஸ் த்ரில்லராக்கி கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சாந்தகுமார். காவல் துறையின் கறுப்பு ஆடுகளைப் பதிவு செய்த அதே பாதையில், சின்சியர் அதிகாரிகளின் சிரமத்தையும் கச்சிதமாகச் சொன்ன விதத்துக்காக சாந்தகுமாருக்கு... ஒரு புன்னகைப் பூங்கொத்து!

No comments:

Post a Comment

my blog recent