இணையம் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக படிப்படியாக மாறி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் காந்தத்தில்
உள்ள வட துருவம், தென் துருவம் மாதிரி நல்லது, கெட்டது என இரு எதிர்
சங்கதிகளும் பரவிக் கிடக்கத்தான் செய்யும். அதில் எது நல்லதோ அதை
தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியது நம் திறமை.
இந்தத் தொடரில் நாம் பார்க்கப் போகும்
விஷயங்கள் எல்லாமே ஏற்கனவே நடந்து, ஒரு சிலர் பாதிப்புக்கு உள்ளான
விஷயங்கள். அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெற்று அதே பிரச்னையில் இன்னும்
ஒருவர் மாட்டி விடக்கூடாதே என்பதற்காகத் தான் இந்தத் தொடரே! மற்றபடி உங்களை
அநாவசியமாக பயமுறுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல!!
Phishing Scam என்பது தான் இணையத்தில் பரவிக்கிடக்கும் அடிப்படைத் திருட்டு.
பெரிய கம்ப்யூட்டர் ஜாம்பவான்களே எளிதில் ஏமாந்து அடிபட்டு விடும் திருட்டு இது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தளம்
போலவே அச்சு அசல் மாறாமல் வடிவமைத்து அதில் நம்மை உள்ளே தந்திரமாக நுழைய
வைத்து நமது பாஸ்வேர்டுகளை திருடுவது தான் அடிப்படை நோக்கம்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு ஐசிஐசிஐ
வங்கியின் ஆன்லைன் வசதி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மேற்படி
வங்கியின் www.icicibank.com இணைய தளத்தின் உள்ளே நுழைந்து யூசர் நேம்,
பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்வீர்கள்.
இந்த இணைய தளம் போலவே ஒன்றை உருவாக்கி
உங்களுக்கு “ஐயன்மீர், உங்களுடைய அக்கவுண்ட்டை யாரோ திருட
முயற்சிக்கிறார்கள். எனவே உடனடியாக உள்ளே நுழைந்து பாஸ்வேர்டை மாற்றவும்”
என்று ஐசிஐசிஐயில் இருந்து மின்னஞ்சல் வருவது போல ஒரு டுபாகூர் ஈமெயில்
முகவரியிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவார்கள். நீங்களும்
பதட்டத்தில் அந்த மின்னஞ்சல் முகவரியில் இருக்கும் இணைய தள முகவரியைச்
சொடுக்குவீர்கள். அது அந்த திருடர்கள் உருவாக்கி இருக்கும் போலி இணைய
தளத்திற்கு உங்களை நேரடியாக எடுத்துச் செல்லும். அங்கேயும் அச்சு அசலாக
ஐசிஐசிஐ வங்கி இணைய தளம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் அல்லவா? எனவே
நீங்கள் வழக்கம் போல யூசர் நேம், பாஸ்வேர்டு டைப் செய்வீர்கள். அது போதாதா?
அடுத்த விநாடியே மேற்படி திருடர்களின் கையில் உங்களுடைய யூசர் நேம்,
பாஸ்வேர்டு கிடைத்து விடும்.
இங்கே ஐசிஐசிஐ வங்கி இணையம் என்று
குறிப்பிட்டது ஒரு சாம்பிளுக்கு தான்! இதே போல பே பால், ஈமெயில் என பல
கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்படலாம்.
நம்மவர்கள் பொதுவாகவே உலகமகா சோம்பேறிகள்.
ஈமெயில் அக்கவுண்ட்டிலிருந்து அனைத்து விதமான ஆன்லைன்
அக்கவுண்ட்டுகளுக்கும் ஒரே பாஸ்வேர்டு தான் வைத்திருப்பார்கள். எனவே ஏதாவது
ஒன்றின் பாஸ்வேர்டு கிடைத்தால் போதும். மற்ற அனைத்தையும் அலேக்காக அமுக்கி
விடலாம்.
நாள் தோறும் இந்த மாதிரியான திருட்டின் மூலம் உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என்பது உண்மை.
இந்தத் திருட்டைத் தடுப்பதற்காகவே பல்வேறு
வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கிகள் முதற்கொண்டு எடுத்து
வருகின்றன என்றாலும் ‘கள்வன் பெரியவனா, காப்பான் பெரியவனா’ என்ற போட்டியில்
எப்போதுமே கள்வன் தான் முதலில் போய்க் கொண்டிருக்கிறான்.
இனிமேல் இந்த மாதிரி எதாவது மின்னஞ்சல்
வந்தால், அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்வதற்குப் பதிலாக ப்ரவுசரை ஓபன்
செய்து நீங்களாகவே வழக்கம் போல தட்டச்சி அந்த இணைய தளத்திற்கு செல்வது
போலச் செல்லுங்கள். இது தான் இந்த phishing scam எனப்படும்
தில்லுமுல்லுவில் இருந்து தப்பிக்க முதல் வழி.
தவறியும் அப்படி அவர்கள் விரித்த வலையில்
சிக்கி உள்ளே நுழைந்து பாஸ்வேர்டு போன்ற சமாச்சாரங்களைக் கொடுத்து
விட்டால், உடனடியாக மீண்டும் நேரடியாக உள்ளே நுழைந்து உடனடியாக பாஸ்வேர்டை
மாற்றுங்கள். சம்பந்தப்பட்ட வங்கிக்கோ, நிறுவனத்துக்கோ தொடர்பு கொண்டு இந்த
மாதிரி டுபாகூர் மின்னஞ்சல் வந்தது என்ற தகவலைத் தெரிவியுங்கள். இதெல்லாம்
நீங்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து தடுக்க கண்டிப்பாக உதவும்.
சரி.. இந்த மாதிரியான லிங்க் எல்லாம்
வந்தால் நான் ஏமாற மாட்டேன் என்கிறீர்களா? உங்கள் மின்னஞ்சலை ஹேக் செய்து
உள்ளே நுழைந்து உங்களுக்கே தெரியாமல் உங்கள் நண்பர்களிடமிருந்து காசு
பிடுங்கலாம்.. எப்படி தெரியுமா?
அடுத்த வாரம் பார்ப்போம்….
No comments:
Post a Comment