Thursday, January 12, 2012

நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட



ஏற்கனவே பலமுறை த்ரீ இடியட்ஸ் பார்த்து விட்டதால் நமக்கு ஒவ்வொரு காட்சியும் மனப்பாடமாக தெரியுமென்பதால் அடுத்தடுத்து என்ன வரும் என்பது தெரியுமென்பதால் சுவாரஸ்யம் குறைவது போல் தோன்றுவது நிஜமே. இருந்தாலும் ஷங்கர் படத்துடனே நம்மை கட்டிப் போடுகிறார். பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் போதே படத்தை வெளியிட்டது என்ன காரணமோ தெரியவில்லை. எதிர்பார்ப்பு வேறு கன்னாபின்னாவென்று எகிறியிருப்பதால் திரையரங்கில் கூட்டம் தாங்க முடியவில்லை. பொங்கல் பண்டிகைக்காக இன்று இரவு திருவாரூர் செல்லவிருப்பதால் பொங்கலுக்கு வெளியாகும் மற்றபடங்களின் விமர்சனங்கள் திருவாரூரிலிருந்து.

சரி படத்தின் கதைக்கு வருவோம்.

ஸ்ரீகாந்த்(வெங்கட்ராம கிருஷ்ணன்) மற்றும் ஜீவா(சேவற்கொடி செந்தில்) நண்பர்கள். மற்றொரு நண்பனான சத்யன் (ஸ்ரீவத்சன் (அ) சைலன்சர்)போன் செய்து அவர்களின் மிக முக்கிய நண்பனா விஜய்(பஞ்சமன் பாரிவேந்தன்) வந்திருப்பதாக அழைத்ததால் அவசரஅவசரமா அவர்கள் படித்த பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு விஜய் வரவில்லை, விஜயின் இருப்பிடம் மட்டுமே தெரியுமென சத்யன் சொன்னதால் அங்கு நோக்கி செல்கிறார்கள். பிளாஷ்பேக் துவங்குகிறது. சென்னையின் நம்பர் ஒன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார்கள் மேற்சொன்ன நண்பர்கள் எல்லாம்.

அந்த கல்லூரியின் முதல்வர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரின் சித்தாந்தம் விஜய்க்கு பிடிக்கவில்லை. ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் படிப்பில் பிலோ ஆவரேஜ் மாணவர்கள். விஜய் கல்லூரியிலயே முதலாக வரும் மாணவர். சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற் நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானா (ரியா)வுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

அவர்கள் இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். பிளாஷ்பேக் ஓவர். சத்யனின் உதவியால் ஸ்ரீகாந்தும் ஜீவாவும் விஜயின் இருப்பிடம் அறிந்து அங்கு செல்கின்றனர்.

ஆனால் அந்த இடத்தில் பஞ்சமன் பாரிவேந்தன் பெயரில் இருப்பவர் S.J.சூர்யா. இவர்கள் அதிர்கின்றனர். பிறகு அவரை மிரட்டி விஜயின் உண்மையான இருப்பிடம அறிந்து அங்கு செல்லும் வழியில் இலியானாவுக்கு அன்று கல்யாணம் என்பதை அறிகின்றனர். அங்கு சென்று திருமணத்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துக் கொண்டு விஜயின் இருப்பிடம் நோக்கி செல்கின்றனர். அங்கு விஜயை கண்டுபிடித்ததும் தான் தெரிகிறது, விஜய் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று. அனைவரும் ஒன்று சேருகின்றனர். படம் நிறைவடைகிறது.


என்னடா படத்தின் முழுகதையும் சொல்லி விட்டேன் என்கிறீர்களா, அதான் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் த்ரீஇடியட்ஸ் படத்தை பார்த்திருப்பார்களே. அதனால் தான் கதையில் சஸ்பென்ஸ் வைக்கவில்லை. படத்தை கொடுக்கும் முறையில் ஷங்கர் வெற்றிபெறுகிறார்.

விஜய் அடக்கி வாசித்திருக்கிறார். பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும், ஜீவாவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாத போது அவரை ஸ்கூட்டியில் உட்கார வைத்து மருத்துவமனையின் உள் வரை ஓட்டி வரும் போதும், முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். படத்தில் விஜய்க்கு அடுத்த இடம் அவருக்கு தான். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார்.

ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும்.

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு விட்டு பார்க்கும் போது ரம்மியமாக இருக்கிறது.

இவ்வளவு சொல்லிவிட்டு ஹீரோயினை பற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி என்கிறீர்களா, என்ன செய்ய நானோ தமிழ்நாட்டுகாரனாகி விட்டேனே. நமக்கு கொழுகொழுவென்று இருந்தால் தான் பிடிக்கிறது. இவரைப் பார்த்தால் வத்தலும் தொத்தலுமாக பிடிக்கமாட்டேன் என்கிறது. எனவே என் விமர்சனத்தில் இலியானா கட்.

வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

படம் பார்த்து விட்டு அவரச அவசரமாக எழுதுவதால் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன். திருத்தங்கள் இருந்தால் குறிப்பிடவும் பிறகு திருத்திக் கொள்கிறேன். அடப்பாவிங்களா ஹிட்டுக்காக எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. காலங்கார்த்தால பல்லுகூட விளக்காமல் சினிமாவுக்கு போய் பசியோடு எழுதினால் தான் ஹிட்டு கிடைக்கிறது, என்ன செய்ய, வரவர முதல்நாள் படம் பார்த்து விமர்சனம் எழுத பதிவுலகில் பெரும் கூட்டமே உள்ளது. அதில் தனித்து தெரிய தான் இவ்வளவும்.

No comments:

Post a Comment

my blog recent