அலுவலகத்திலே அவன் தான் சுமாரானவன். கட்டம் போட்ட சட்டை, பச்சை கலர் பேன்ட் எல்லாம் போடுவான். ஒரு நாள் டீம் அவுட் சென்றிருந்த போது பாம்பு ஒன்று வந்துவிட்டது. ரோமியோக்கள் எல்லாம் குருவி விஜய் போல ஜம்ப் பண்ணி பறந்துவிட்டார்கள். பச்சை பேன்ட்தான் குச்சியால் அதை ஓரங்கட்டி சில பெண் கலீக்ஸை காப்பாற்றினான். அன்று முதம் அவன் தான் ஹீரோ எங்கள் அலுவலகத்தில். ஹீரோயிசம் என்பது ஒற்றை பரிணாமம் கொண்டதல்ல.அதை இன்னொரு கோணத்தில் காட்டிய படம்தான் 3 இடியட்ஸ். இதை தமிழில் விஜய் செய்கிறார் என்ற போதே நான் சொன்னது,இது ஒண்ணும் ஆஃப் பீட் படமல்ல. இன்னொரு ஹீரோயிச படம் தான், மாறுப்பட்ட கோணத்தில்.
ஃப்ளைட் கிளம்புகிறது. உள்ளே இருக்கும் ஸ்ரீகாந்திற்கு பாரி கிடைத்துவிட்டான் என ஃபோன் வருகிறது. மாரடைப்பு போல் நாடகமாடி இறங்குகிறார். பேன்ட் போடாதது கூட தெரியாமல் ஜீவாவும் இணைகிறார். "இவன் தூரத்தில் பூத்திட்ட அன்னை மடி" என்ற பிண்ணனி பாடலோடு பாரியை தேடி கிளம்புகிறார்கள்.பாரிதான் விஜய். இதை விடவா ஒரு மாஸ் ஓப்பனிங் விஜய்க்கு அமைந்திருக்கிறது?
படம் முழுக்கவே எல்லோருக்கும் காட்ஃபாதர் போல இருக்கிறான் நாயகன். "டேய் அவர் யாரு தெரியுமாடா" என்ற கூச்சல் எதை செய்ய வேண்டுமோ, அதை சத்தமில்லாமல் இன்னும் வீரியத்தோடு செய்திருக்கிறார்கள். கூடவே விஜயின் ப்ளஸ் ஆன காமெடி, குறும்புகள் கதையோடே அமைந்தது கொடுப்பினைதான்.
கதை மண்ணாங்கட்டி எல்லாம் தெரிந்திருக்கும். நாம் தமிழில் எப்படி செய்திருக்கிறார்கள் என்று மட்டும் பார்ப்போம். ஏனெனில் நண்பன் 3 இடியட்ஸின் க்ரிஸ்டல் க்ளியர் ஃபோட்டோக்காப்பி. ஆங்காங்கே லேசான கரும்புள்ளிகள். ஆனால் அவை கண்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டது ஷங்கரின் சாமர்த்தியம். இது போன்ற ஒரு படத்திற்கு ஷங்கர் தேவையா என்று யோசித்தேன். ஆனால் 3 இடியட்ஸ் ஷஙக்ருக்கு ஏற்படுத்திய பாதிப்பு அவரை சரியான தேர்வாக ஆக்கியிருக்கிறது. தமிழுக்கு ஏற்றது போல் மாற்றியிருக்கிறேன் என்ற ஜல்லியடித்து திரைக்கதையில் தங்கள் பெயர் போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் வெறும் இயக்கம் மட்டுமே என சொல்லியிருப்பது பாரட்டத்தக்கது.
அடுத்து சத்யராஜ். வேறு யாரையும் யோசிக்க முடியாத தோற்றம். எல்லோரும் எதிர்பார்த்த தேர்வுதான். குழைத்து குழைத்து பேசி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். படத்தின் பலமல்ல, பலவீனமுமல்ல. கொடுத்து வேலையை சரியாக செய்திருக்கிறார்.
ஜீவா. இந்த தலைமுறை நடிகர்களில் தனுஷிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர். விஜயோடு ஒன்றாக பார்த்தபோது துள்ளினேன் நான். குறைந்த பந்துகளே எதிர்கொண்டதால் சதம் நழுவிய வீரர் எனலாம். என்னைப் பொறுத்தவரை பெர்ஃபெக்ட் காஸ்டிங் என்றால் அது இவரது கேரக்டர்தான். ஹேட்ஸ் ஆஃப் ஜீவா.
ஸ்ரீகாந்த் சிறப்பாக செய்திருக்கிறார். மாணவன் ரோலுக்கு மீசையெடுத்து, உடம்பை குறைந்துக் கொண்டு ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். என்னைக் கேட்டால் ஜெயம் ரவி போன்ற யாரையாவது போட்டிருக்கலாம்.
இலியானா. முனிம்மா கலக்கியிருக்கிறார். இவரது எந்த படத்தையும் நான் பார்த்தது இல்லை. பொண்ணு சும்மா சுர்ருன்னு நடிச்சிருக்கு. பாடல்களில் மட்டும் நம்முடன் சேர்ந்து விஜயை ரசிக்குது.
ஹாரீஸ். பாடல்கள் ஹிட் என்பதை தாண்டி படத்தில் இருக்கிறார் ஹாரீஸ். என் கண் முன்னே & நல்ல நண்பன் பாடல்கள் காட்சிக்கு கூடுதல் பலம் தான். எங்கேயும் உன்னாலே உன்னாலே மெட்டுகளை கேட்க முடியாமல் இருந்ததே பெரிய விஷயம்.
கார்க்கி. பாடல்களோடு வசனமும் எழுதியிருக்கிறார். இந்தியில் சக்கை போடு போட்ட சமாத்கார் / பலாத்கார் காட்சியை அழகாக தமிழ்ப்படுத்தியிருக்கிறார். என்னன்னு கேட்காம நீங்களே பாருங்க. 2 வரியில் ஒரு சிறுவன் ஃப்ளாஷ்பேக்கை சொன்னவுடன் "என்னடா திருக்கிறள் சைசுல ஃப்ளாஷ்பேக்கை முடிச்சிட்ட" என்று ரசிக்க வைக்கிறார். “ரெண்டு காலு உடைஞ்சபிறகுதான் சார் நான் சொந்தக்காலிலே நிற்கிறேன்"” இன்னும் பல வசனங்கள். இன்று மாலை பார்க்கும்போது நோட் பண்ணிட்டு வறேன். ஆமாங்க. மாலை காட்சியும் போறேன்.
விஜய். வெல். ஹவ் டூ சே????? எனக்கு விஜயை பிடிக்கும்தான். ஆனால் எப்போதும் அவரை சிறந்த நடிகர் என வாதிட்டதில்லை. அதே சமயம் வயித்தெரிச்சல் எஸ்.எம்.எஸ் ஆசாமிகள் சொல்வது போல ஒரேயடியாக நிராகரிக்கவும் முடியாது. வேலாயுதித்தில் வந்த அதே விஜய். சட்டையை மட்டுமே மாற்றியிருக்கிறார். தலைமுடி கூட மாறவில்லை. ஆனால் படத்தில் விஜய் எவ்வளவு கச்சிதமாக ரோலை நடித்திருக்கிறார் என்று பாருங்கள். அதுதான் விஜய். அவருக்கே உரிய குறும்பும், காமெடியும் குஷி, சச்சினுக்கு பிறகு சரியாக அமைந்திருக்கிறது. ஒரு சில காட்சிகளில் மட்டும் அமிர்கான் தந்த ரியாக்ஷன்களை தர முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி, தனக்கு என்ன வருமோ அதை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். நேற்று ட்விட்டரில் "சத்யன்,ஜுவா, விஜய்,சத்யராஜ், ஸ்ரீகாந்த். இந்த வரிசையில் நடிப்பு இருக்குமென யூகிக்கிறேன்" என்று சொல்லியிருந்தேன். அதை பொய்யாக்கி விஜய் வென்றுவிட்டார். கில்லி ஒரு ஆக்ஷன் படம். அதோடு இதை ஒப்பிட முடியாது. ஆனால் கில்லிதான் எனக்கு விஜயின் சிறந்த படமாக இருந்தது. ஆம், இருந்தது.
படத்தில் விஜய் யாரையும் அடிக்கவில்லை. ஆனால் சத்யராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா.. அட அவங்க அக்கா கூட விஜயை அடிக்கிறார்.அரங்கில், இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளும் கொட்டப்படுகின்றன. ஒரு வெற்றிக்காக இத்தனை பேரிடமா அடி வாங்குவது என வழக்கம் போல் வக்கனையா குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் தனக்கென இமேஜ் எதுவும் எல்லாம் இல்லையென்பதை திட்டவட்டமாக நிரூபிக்கிறார் விஜய்.
படத்தின் குறைகளாக பார்த்தால் நீளத்தை சொல்லலாம். அது எல்லா ஷங்கர் படத்திலும் இருக்கும் ஒரு குறை. ஆனால் எல்லா காட்சிகளையும் கதையோடு பிண்ணியது திரைக்கதை ஆசிரியரின் சாமர்த்தியம். படம் முடிந்த பின் வரும் 5,10 நிமிட காட்சிகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.
No comments:
Post a Comment