Wednesday, November 30, 2011

விஜய்க்கு ‘துப்பாக்கி’ தர மறுத்த தயாரிப்பாளர்!




விஜயின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பை நீண்ட காலத்திற்கு எகிற வைத்துக் கொண்டிருக்கும் படமென்றால் அது விஜய் – முருகதாஸ் கூட்டணிப் படம் தான். படம் பற்றிய எல்லாக் கருத்துக்களுமே கசிந்து கொண்டிருக்க எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் வெளியாகாமல் நீண்ட நாட்களாக இருக்கும் விஜய் படமும் இது தான். 
காரணம் வேலாயுதம் முடிந்தபோதே விஜயின் அடுத்த படமான நண்பனும் சூட்டிங்கை முடித்துக் கொண்டது தான். வேலாயுதத்தினால் கிடைத்த பெரு வெற்றி, நண்பன் படம் மூலம் பெறப்போகும் பிரம்மாண்ட வெற்றி, இவை இரண்டும் விஜய் – முருகதாஸ் கூட்டணிப் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து விட்டது. விஜய் என்றால் ‘மாஸ்’, முருகதாஸ் என்றால் ‘கிளாஸ்’ இவை இரண்டும் இணையும் போது மிகப்பெரும் தீனி ஒன்று விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் கைகளுக்குள் மாறியிருக்கும் இப்படத்திற்கு ‘துப்பாக்கி’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்ற நம்பகரமான தகவலும் வெளியாகியிருக்கின்றது. அதேபோல் ஹீரோயினாக ‘கிங் பிஸர்’ லேடியோ, பிரியங்கா சோப்ராவோ அல்ல பழனி படத்தில் நடித்த காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு – சந்தோஸ்சிவன், வசனம் – ஜெயமோகன், இசை – ஹாரீஸ் ஜெயராஜ் என்ற தகவல் எல்லாம் பல நாட்களுக்கு முன்பே வெளியாகியது.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் யாவும் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் புதிதாக ஒரு சிக்கல் துப்பாக்கிக்கு முளைத்திருக்கின்றது. 
தமிழில் முன்னணி நடிகரான விஜயின் படங்கள் தெலுங்கில் ‘டப்’ செய்யப்படுவதில்லை. காரணம் விஜயின் அதிக படங்கள் தெலுங்கிலிருந்தான ரீமேக் தான். தற்போது சங்கர் இயக்கியுள்ள நண்பன் படத்தை தெலுங்கில் ’3 ராஸ்கல்ஸ்’ என்ற பெயரில் டப் செய்யப்போகின்றார்கள். அதேபோல நேரடித்தமிழ்;ப்படமான துப்பாக்கியையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட தயாரிப்பாளர் தரப்பு தீர்மானித்திருக்கின்றது. இங்கு தான் ஆரம்பமானது பிரச்சினை.
தெலுங்கில் வெளியான ‘போக்கிரி’ படத்தை தமிழிலும் ரீமேக் செய்து ‘போக்கிரி’ என்ற பெயரிலேயே வெளியிட்டார்கள். அதேபோல இப்படத்தையும் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளிலும் ‘துப்பாக்கி’ என்றே வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பெயரை கடந்த 30 ஆம் திகதி ஜூன் மாதம் தயாரிப்பாளர் ஜின்கா ஹரீஸ் பாபு, ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் பதிந்துள்ளார். 
‘நான் இந்த டைட்டிலை எவருக்கும் கொடுக்கவில்லை. அதேபோல் எவரும் இந்த டைட்டிலை என்னிடமிருந்து வாங்குவதற்கும் அணுகவில்லை. இவ்வாறிருக்கையில் முருகதாஸின் தெலுங்கு துப்பாக்கி தொடர்பான செய்திகள் எனக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. தீவிரவாதத்தை மையமாகக் கொண்டு ‘துப்பாக்கி’ திரைப்படத்திற்கான கதையை நான் எழுதிவிட்டேன். பாடல்களும் தயாராகிவிட்டது. படத்தில் நடிக்கவுள்ள நடிக, நடிகையர்களும் தெரிவு செய்யப்பட்டுவிட்டார்கள். இந்த நேரத்தில் விஜயின் துப்பாக்கி  படத்திற்கு தெலுங்கில் எவ்வாறு அனுமதி தந்தார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது’ என தயாரிப்பாளரும், இயக்குனருமான ஹாரீஸ் பாபு தெரிவித்துள்ளார். 
துப்பாக்கி படத்தில் விஜய் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஸன் படமாக அமையவுள்ள இப்படத்தில் சண்டைக்காட்சிகள் பெரியளவில் பேசப்படும். திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு அருகாமையில் உள்ள இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அதிகளவான காட்சிகள் மும்பையில் எடுக்கப்படவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

my blog recent