நண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள்
ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து
விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ஆர்ப்பாட்ட மனநிலை அல்ல இது. இரண்டு
வாரமாக கனவிலும் நினைவிலும் ஹார்ட்டிலே பேட்டரி போட்டு வைத்த
எதிர்பார்ப்புகளை எல்லா வகையிலும் பூர்த்தி செய்திருக்கிறான் நண்பன். சமீப
காலங்களில் யாராவது ஒரு நண்பரின் மூலமாக இன்னொரு புதிய நண்பரையோ நபரையோ
சந்திக்கும் ஒவ்வொரு விஜய் ரசிகனுக்கும் இது நடந்திருக்கும். சில வேளைகளில்
“இவரு விஜய் ரசிகர் தெரியுமா?” என்று போகும் பேச்சுகளின் பொழுதுகளில்
“நீங்களா !!!! விஜய் பேனா… ? ஏங்க போயும் போயும் விஜய்க்கா?” என்பது போன்ற
இளக்காரப் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்திருக்கும். விஜயைப் பிடிக்கும் என்று
கூறினால் Bad Taste என்பதோ, விஜயைப் பிடிக்காது என்று கூறுவது,
முகப்புத்தகத்தில் விஜயைப் பற்றி தேவையே இல்லாத அவதூறு செய்திகளைப்
பரப்புவது, மார்பிங்க் செய்யப்பட்ட தவறான புகைப்படங்களைப் பதிவிடுவதுதான்
ஒரு Intellectual மனோபாவம் என்று நினைக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும்
“இனிமேல் யாரும் அப்படில்லாம் சொல்லவோ செய்யவோ கூடாதுடா கண்ணா” என்று சேது
படத்தில் வரும் வைத்தியரைப் போல மயிலிறகால் வருடி ஒத்தடம்
கொடுத்திருக்கிறான் நண்பன்
மொத்தத்தில் என் நண்பன் எப்படித்தான் இருந்தான் என்று வகைவகையாய் பார்ப்பதற்கு முன்னால் சில விஷயங்கள் பேசி விடுவோம்.
1997 – 2000 இந்த காலகட்டங்களில் பள்ளி
இறுதியோ கல்லூரியோ படித்துக் கொண்டிருந்தவர்களில் தமிழ் சினிமாக்களை
விரும்பிப் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த எவரிடத்தில் வேண்டுமானாலும்
கேட்டுப் பாருங்கள், கண்டிப்பாக ஆழ்மனதின் அடி ஆழத்தில் இருந்து
சொல்லுவார்கள் உண்மையிலேயே விஜய் பிடிக்குமென்று. காரணம் மூன்று முக்கிய
படங்கள் 1) காதலுக்கு மரியாதை 2) துள்ளாத மனமும் துள்ளும் 3) குஷி. எனக்கு 8
முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பதின்பருவத்தின் துவக்கம் அது. டைரக்டர்,
அப்பாடக்கர், கதை, லைட்டிங்க், வெயிட்டிங் – இந்த சங்கதிகளெல்லாம்
என்னவென்றே அறியாத அந்த ஞானசூன்ய வயதில் “சுண்டு விரலால கூட தொடல பாத்தியா…
ஆனா செம லவ் ஸ்டோரில்லா… விஜய்-ஷாலினி சூப்பர்ல்லா” இதுதான் நாங்கள்
காதலுக்கு மரியாதை படத்துக்கு கொடுத்துக் கொண்ட “TagLine”. அந்தப் படத்தின்
பாதிப்பில் நெல்லையின் ஒவ்வொரு புத்தகக் கடையிலும் போய் “அண்ணாச்சி… ‘Love
and Love Only’ புக் இருக்கா” என்று கேட்டு பல அண்ணாச்சிகளின்
முறைப்புக்கும் ” ஏலே… செத்த மூதி… டவுசரே ஒனக்கு இன்னும் ஒழுங்கா இடுப்புல
நிக்கல.. ஒனக்கு லவ்வு புக்கு கேக்கோ லவ்வு புக்கு… சவட்டிப் புடுவேன்
சவட்டி… ஓடுல… ” என்று சில அண்ணாச்சிகளின் நாக்கைத் துறுத்திய மிரட்டலுக்கு
ஆளானதும் அக்காலம்தான். உண்மையைச் சொன்னால் “Amazon” முதல் “Flipkart” வரை
எங்கெங்கிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. இன்று வரை அந்தப் புத்தகம்
மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை.
“என்னைத் தாலாட்ட வருவாளோ, மேகமாய் வந்து
போகிறேன், மேக்கரீனா, பாப்பூ பாப்பூ” என்று சில பல கேசட்டுகளால்
ரீவைண்ட்-பார்வார்டு என்று எனது Philips 2 in 1 டேப்ரிக்கார்டரை கதறக்
கதறக் கற்பழித்துக் (நண்பன் எபக்ட்) கொண்டிருந்ததும் அதே காலகட்டம்தான்.
எனக்கு விஜய் மிக மிக அதிகமாய்ப் பிடித்துப் போனதும் இந்தக்
காலகட்டத்தில்தான். அதற்குப் பிறகு ஏற்றங்கள், இரக்கங்கள் வந்து வந்து
போனாலும் விஜயைப் பிடிக்கும், விஜய் படங்கள் ரொம்பப் பிடிக்கும் என்ற
தன்னிலை மட்டும் மாறவே இல்லை. சுறா, குருவி, பகவதி போல் ஒரு சில படங்களைப்
பார்த்த சில வேலைகளில் விஜய் கதைகளைக் கொஞ்சம் பார்த்துத்
தேர்ந்தெடுக்கலாமே என்ற வருத்தம் மட்டும் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட சில
நேர வருத்தங்களுக்கு ஒட்டுமொத்த வடிகாலாய் அமைந்திருக்கிறான் நண்பன்.
“நண்பனா.. அது 3 இடியட்ஸோட ரீமேக்தான?”
“ஆமா, 3 இடியட்ஸோட ரீமேக்தான். ஆனா 3 இடியட்ஸே 5 Point Someone ஓட ரீமேக் தான.”
“என்னதான் இருந்தாலும் அமீர்கான் நடிச்ச ரோல்ல விஜயா..? அதெல்லாம் சரிப்படாது… அமீர்கான்ல்லாம் யாரு”
“ம்.. மொதல்ல சொல்லு… அமீர்கான்ல்லாம்
யாரு? என்னய்யா இது பெரிய அநியாயமா இருக்கு… அமீர்கான் மட்டும் பொறக்கேலயே
full costume போட்டுகிட்டு மூஞ்சீல எக்ஸ்பிரஷன் காட்டிகிட்டே பொறந்தாரா…
அவரும் பாத்து பழகி வந்துதான நடிச்சாரு. அப்படியே பாத்தாலும் இந்தப் படம்
எப்படி இருக்கு. விஜய் எப்படி நடிச்சிருக்கார்ன்றதுதான முக்கியம்”
(பாலிவுட்டிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அமீர் மட்டுமே. அமீருக்காக
மட்டுமே Taare zameen par, Rang de Basanthi, 3 Idiots, Faana ஆகிய
திரைப்படங்கள் ஒவொன்றையும் 4,5 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்,)
“படம் நல்லாருக்கா?”
“ஆமா. படம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. இப்ப என்ன சொல்ற”
“அப்டியா… ம்ம்ம்… ஷங்கர் படம்னால நல்லாதான் இருக்கும்….”
“ஒலக அநியாயம்டா சாமி… அப்படின்னா சுறா படம் நல்லா இல்லாம இருந்ததுக்கு எஸ்.பி.ராஜ்குமார்தான காரணம். எதுக்கு விஜய்ய சொன்னீங்க?”
“ம்ம்ம்… அது எப்படி சொல்ல முடியும்…
அந்தப் படம்லாம் ஒரு படமா… தமன்னா நாய்க்குட்டிக்காக தற்கொலை பண்ண
போவாளாம்… இவுரு காப்பாத்துவாராம். …”
“யேய்.. நான் சொகப்பிரசவம்,
கொறப்பிரசவம்னாடா கேட்டேன்… ஏன்ப்பா சம்பந்த சம்பந்தமில்லாம பேசுறீங்க. சரி
விடுங்க….எந்தக் காலகட்டத்துல்லயும் உங்ககிட்ட பேசி பிரயோஜனமே இல்ல…
நண்பன் படம் பாருங்கப்பா… கண்டிப்பா மாறுவீங்க”
தமிழ் சினிமாவை பிரமாண்டங்கள் மூலம்
மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் பிதாமகன் பொறுப்பை தலையில் சுமந்து
கொண்டிருக்கும் ஷங்கர் போன்ற ஒரு இயக்குநர், மிக எதார்த்தமான ஒரு கதை,
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் மாஸ் திரைப்படங்களின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாக
திகழும் இளைய தளபதி விஜய், இது தவிர ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன்
என்று நல்ல திறமையான சகநடிகர் பட்டாளம், எடிட்டிங் – இசை – கேமரா
-ஒலிக்கலவைக்கு ரசூல் பூக்குட்டி – பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி என
தமிழ்சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்பப் பட்டாளம் இவையனைத்தும்
மிகச்சரியாக ஒரு புள்ளியில் இணைந்தால் கண்டிப்பாக அலாவூதீன் தான்..
விளக்குதான்… மொத்தத்தில் மிகப்பெரிய அற்புதம்தான்.
விஜய் – நடிப்பு பிரமாதம். நடனம்
அட்டகாசம். 37 வயதிலும் ஒரு மாணவனுக்கான உடல்மொழி, குரல்மொழி, இளமை துள்ளி
விளையாடுகிறது. தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் வேறு எந்த நடிகராலும்
இந்தக் கதாப்பாத்திரத்தை இவ்வளவு செம்மையாய்ச் செய்திருக்கவே முடியாது.
அப்படியே முக்கி முனகி, எம்பி எம்பிச் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு
ரீச், ஒரு ஓப்பனிங்க் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மிகச் சரியாய் சொல்ல
வேண்டுமானால் ஆக்ஷ்னில் மட்டுமல்ல, பஞ்ச் டையலாக்கில் மட்டுமல்ல,
இப்படியும் கூட மாஸ் கிளப்பலாம் என்பதை விஜய் அமைதியாய் ஆனால் மிக மிக
அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார். The Vijay Mass is now Redefined.
விஜய், ஜீவா இரண்டு பேருமே செம
பெர்மான்ஸ். பாட்டுல்லாம் சூப்பர். அஸ்க லஸ்கா செம ஸ்டைலீஷ். இருக்கானா
இல்லையானா டான்ஸ்ல பட்டை. இந்த கதையோட்டத்துக்கு இந்தப்பாட்டு தேவையா என்று
யோசித்தால் ஷங்கர் விஜயின் கடைநிலை ரசிகனையும் மனதில் வைத்து
அமைத்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. இலியானா குடுத்த கேரக்டரை
செய்திருக்கிறார், கொஞ்சலாக. சத்யராஜ், சத்யன் இருவருமே
பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். வசனம். வயிறு வலிக்க சிர்க்க வைக்கிறது.
நெறைய நல்ல ந்ல வசனங்கள் படம் நெடுக. மற்றபடி நீங்கள் எந்த எந்த சீன்
எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதை விட
பிரமாதமாகவே இருக்கிறது. மிக மிக அதிகமாக நோண்டிப் பார்க்கும் comparison
attitude ஓடு இந்தப் படம் பார்த்தால் கண்டிப்பாக ஒரு அருமையான படம்
கொடுக்கும் மிகச்சிறந்த உணர்வை இழந்து விடுவீர்கள். தமிழுக்கு இது
உண்மையிலேயே வேறு நிறம்.வேறு சுவை. அனுபவித்துப் பாருங்கள்.
என் தளபதி போல யாரு மச்சான்…
ஒரு கள்ளம் இல்லா உள்ளம் வச்சான்…
அவன் முன்னே வானம் குள்ளம் மச்சான்….
மொத்தத்தில் நண்பன் – ஆல் இஸ் வெல் – ஆல்வேஸ் வெல். A very very refreshing feel good movie.