நான் பொய் வாக்குறுதி கொடுப்பதில்லை! – சூர்யா
Published on October 12, 2011 by ctech52.blogspot.comநாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறார் சூர்யா. பேச்சிலும், தோற்றத்திலும் அதை உணர முடிகிறது. தொடர் வெற்றிகள் அதிர்வு ஏற்படுத்தாத சிம்பிள் சூர்யாவாகவே நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார்.
’7ஆம் அறிவு’ எந்த மாதிரியான படமாக இருக்கும்?
’7ஆம் அறிவு’ ஒரு படம் என்பதைவிட ஒரு அனுபவம் என்று சொல்வதே சரியாக இருக்கும். டைம் மிஷினை அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல இது. ஆனால் வரலாற்று காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையே இருக்கிற இடைவெளியை நிரப்புவது ஸ்ருதி ஹாசன்.
ஸ்ருதி ஹாசன் அறிமுகம் எப்படி?
நமக்கெல்லாம் சினிமாவைக் கற்றுக் கொடுக்கிற கமல்ஹாசன் சாரின் மகள். அருமையாக நடிக்கிறார். தமிழில் அறிமுகமாகும் முதல்படத்திலேயே ஆக்ஷனும் பண்ணுகிறார்.
‘போதி தர்மன்’ என்ற துறவி வேடத்தில் நடிக்கிறீர்களே. யார் அவர்?
தமிழர்களாக நாம் பல முக்கியமான மனிதர்களை அடையாளம் காணாமல் விட்டிருக்கிறோம். அல்லது அவர்களைப் பற்றித் தெரியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். மறந்துவிட்டோம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதர்தான் ‘போதி தர்மன்’. ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னனின் மூன்றாவது இளவரசராகப் பிறந்தவர். தமிழர் என்றாலும் இவர்தான் ஜென் புத்த மதத்தைப் பரப்பியதில் முக்கியமானவர். உலகில் பாதி இவரை கடவுளாகக் கொண்டாடுகிறார்கள். சீனாவில் தற்காப்புக் கலைகள் ஆரம்பமாவதற்குக் காரணமாக இருந்தவர் போதி தர்மன். சீனாவில் தற்காப்புக் கலைகளுக்கான ‘ஷாவ்லின் டெம்பிளில்’ இவருக்கு ஒரு பெரிய சிலை இருக்கிறது. இந்த மகான் ஏன் சீனாவிற்குச் சென்றார்? அங்கேயிருந்து திரும்பி வந்தாரா இல்லையா? என்பதைப் பற்றி உலகம் முழுவதிலும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழனின் அடையாளம்தான் இந்த ’7ஆம் அறிவு’.
நடிக்க வந்தபோது இருந்த ‘சிவகுமார் மகன்’, ‘சாக்லேட் பாய்’ இமேஜை உடைத்துவிட்டீர்களே…?
சாக்லேட் பாய் இமேஜ் என்பது அப்பா – அம்மா கொடுப்பது. அந்த அழகு வசீகரம் அவர்களால் கிடைப்பது. தானாகவே நமக்கு அமையும். அதைத்தாண்டி நமக்கென ஒரு இமேஜ் உருவாக வேண்டுமென்றால், நாம் தேர்ந்தெடுக்கிற கதைகள், கதாபாத்திரங்களுடன், பெர்ஃபார்மன்ஸையும் சரியாகக் கலக்க வேண்டும். ‘காக்க காக்க’, ‘நந்தா’, ‘பேரழகன்’, ‘பிதாமகன்’ மாதிரியான படங்களை ஏன் பண்ண வேண்டும்? இந்தப் படங்கள் முதலில் எனக்கிருந்த இமேஜை உடைத்தன. இப்படிப்பட்ட படங்களில் நடிக்கும்போது கிடைத்த வெரைட்டி ஒரு புது சந்தோஷமாக இருந்தது. விதவிதமாக பண்ணும்போது வெற்றியும் தேடி வருகிறது.
எல்லோருக்கும் பிடிக்கிற சூர்யாவாக இப்போது மாறியது எப்படி?
பொதுவாக நான் பொய் வாக்குறுதி எதுவும் கொடுப்பது இல்லையென்று நினைக்கிறேன். ஒரு தயாரிப்பாளரோ இயக்குநரோ கதையோடு வரும் போது, அது எனக்கு எந்தளவிற்குப் பொருத்தமாக இருக்கும், என்னால் அந்தக் கதைக்கேற்ற மாதிரி எந்தளவுக்கு மாற முடியும் என்பதை யோசித்தே வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். அவசரப்பட்டு படங்கள் பண்ணுவதில்லை. அதேபோல் குடும்பத்திலுள்ள அனைவரும் பார்க்கக்கூடிய படமாக என் படங்கள் இருக்கவேண்டுமென முயற்சி பண்ணுகிறேன். இந்த வாய்ப்புகள் தானாகவும் தேடி வருகின்றன. நானும் தேடிப் போகிறேன்.
No comments:
Post a Comment