Wednesday, October 26, 2011

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன்

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமெண்ட்!

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!
புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொழுத்தி மகிழ்வோடு உறவினர்கள் அனைவருடன் இணைந்து தீபத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கணினி முன்னே உட்கார்ந்திருப்போருக்கும், மற்றும் ஏனைய உறவுகளுக்கும் வணக்கம் & மீண்டும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வந்த பண்டிகைக் கால ரஜினி - கமல் படங்களின் அந்தஸ்தினையும், தியேட்டர் உரிமத்தினையும் தற்போது தன் வசம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் அவர்கள் தான்.  பண்டிகைக் காலத்தில் வெளியிடப்படுகின்ற படங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தினைக் கருத்திற் கொண்டு வெளியடப்படும் அதே சூழலை உணர்ந்தவர்களாக கதாநாயகர்கள் படக் கருவினைக் தேர்வு செய்தால் மக்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்! அதே வேளை சலிப்பும் இருக்காது.
நீண்ட காலத்தின் பின்னர் விஜய் படங்கள் பற்றிய பல்வேறு பட்ட காமெடிகள், கலாய்த்தல்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு வித்தியாசமான படமாக இப் படம் அமைந்து கொள்ளும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தினைக் கொடுத்திருக்கிறார் வேலாயுதம் பட இயக்குனர் M.ராஜா அவர்கள். வழமையான தமிழ்ச் சினிமாவின் சாயலில் இப் படம் வந்திருப்பினும் ஆங்கில - உலகப் படங்களின் கதை நகர்விற்கு இணையாக ஒரு திருப்பு முனையிலிருந்து படத்தினை தொடக்கியிருக்கின்றார்கள் வேலாயுதம் படக் குழுவினர். சென்னையில் குண்டு வைத்த மர்மக் கும்பலின் ஆரம்ப அசம்பாவிதச் சம்பவத்தோடு தொடங்கும் படத்தில் தனக்கு கிடைத்த அமெரிக்க பயண வாய்ப்பினை உதறித் தள்ளி விட்டு, தன் தாய் நாட்டிற்காக சுதந்திர ஊடகவியலாளராகப் பணி புரிய வேண்டும் எனும் ஆவலுடன் களமிறங்குகிறார் கதாநாயகி ஜெனலியா.

தீவிரவாதிகள் பற்றிய சேதிகளையும், அநீதி புரிவோரையும் ஆத்மார்த்த ரீதியில் தட்டிக் கேட்டால் தான் அது உண்மையான ஊடகவியலாளனுக்கு அழகு எனும் திடகாத்திரம் கொண்டவராக ஜெனலியா தன் கூடப் பணி புரியும் சக பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு பெண்களை பலவந்தப்படுத்திக் கடத்தி வந்து விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வில்லன் கோஷ்டியினரை ரகசியமாக படம் பிடிக்கத் தொடங்கும் போது, வில்லன் கோஷ்டியினரின் கண்களில் மாட்டிக் கொள்ள, ஓடத் தொடங்குகிறார்கள். ஓடத் தொடங்கும் பத்திரிகையாளர்கள் மூவரையும் சேஸிங் பண்ணும் வில்லன் கோஷ்டியினர் ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து தீர்த்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். ஜெனலியாவின் நண்பன் வில்லன் கோஷ்டிகளிடம் மாட்டும் சமயம்,காரிலிருந்து பெற்றோலை ஊற்றித் தீ வைத்து கொலை செய்து விட்டு அவ் இடத்தை விட்டு நகர; சம்பவ இடத்திற்கு ஜெனலியாவும், அவரது சக பணியாளரும் வந்து கொள்கிறார்கள்.

ஜெனலியாவின் சக பணியாளரைக் கொலை செய்த வில்லன் கும்பல் ஜெனலியாவை மாத்திரம் உடனே வெட்டிக் கொலை செய்யாமல் ஆற்றினுள் தூக்கி எறிகின்றார்கள். ஜெனலியாவைக் கொல்லாது விட்ட இடத்தில் லாஜிக் உதைத்தாலும், இங்கே தான் கதை ஆரம்பமாகின்றது. ஆற்றில் விழுந்து தப்பித்த ஜெனலியாவோ, வில்லன்கள் பயணித்த வாகனத்தினுள் தீக்குச்சி விழுந்து பெற்றோல் பையினுள் பட்டு, வெடித்துச் சிதறுவதனைக் கண்ணுற்று, இவர்களை அழித்தது வேலாயுதம் என்று எழுதி வைத்து விட்டு ஹாஸ்பிட்டலுக்குப் போகின்றார்.  வேலாயுதம் யார் என்று அறியும் ஆவலுடன் வில்லன்கள், தீவிரவாத கும்பல் தேடத் தொடங்குகின்றார்கள். இதே வேளை இத்தகைய சூழ் நிலையில் கிராமத்தில் கல கலப்பாக சுற்றத்தாருடன் வாழ்ந்து வரும் விஜய் பட்டணத்தை நோக்கித் தன் தங்கையின் கலியாணத்திற்கு நகை வாங்கும் நோக்கில் கிளம்புகின்றார்.
சென்னைக்கு வந்திறங்கும் விஜய் தீவிரவாத கும்பல்கள் குண்டு வைக்கையில் தற் செயலாக அவர்கள் வழியில் குறுக்கிட்டு, தன் ஒவ்வோர் செயல்களின் ஊடாகவும் அநீதிகளை, ஆபத்துக்களைத் தடுக்கின்றார். மக்கள் முன் தோன்றாது, வில்லன்கள் கண்ணில் படாது வேலாயுதம் என்ற நாமத்துடன் மறைந்து செல்கின்றார் ஹீரோ விஜய். பின்னர் ஒரு சம்பவத்தின் ஊடாக ஜெனலியாவை காப்பாற்றும் விஜயை, ஜெனலியா தன்னிடம் உள்ள வில்லன்கள் கும்பல்களின் கதையினைச் சொல்லி மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்லி விஜயை வேலாயுதமாக வாழச் சொல்லியும்,   தீவிரவாத கும்பல்களை கொல்லுமாறும் கேட்கின்றார்.

மறுப்புத் தெரிவித்து விட்டு, தான் தானவே வாழ்கிறேன் என்று செல்லும் விஜயை அவர் காணும் செயல்கள், தீவிரவாத கும்பலால் மக்கள் பணம் சூறையாடப்படும் நிகழ்வுகள் வேலாயுதமாக மாறத் தூண்டுகின்றன. வேலாயுதமாக மாறிய விஜய் வில்லன்களை ஒழித்துக் கட்டினாரா? வேலாயுதம் யார் என்று அறியத் துடிக்கும் மக்களுக்கு அதற்கான பதில் கிடைத்ததா? அநீதி செய்வோர், தீவிரவாதக் கும்பல்கள், பெண்களை வைத்து வியாபாரம் செய்வோருக்கு என்ன ஆச்சு? ஆகிய விடயங்களுக்கான விடையினை நீங்கள் அகலத் திரையில் வேலாயுதத்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

ஆர்ப்பாட்டத்தோடு, ஹீரோ வந்து - ஓடும் ரயிலை மறித்து அருவாளோடு ஏறும் போது ஹீரோ அறிமுகம் படத்தில் தொடங்குகின்றது. வழமையான பாணியில் ஓப்பனிங் சாங் இடம் பெறும் விஜய் படங்களிலிருந்தும் கொஞ்சம் மாறுபட்டு, படத்தில் கொஞ்ச நேரம் கழித்து ஓப்பனிங் சாங்கினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்ககலாம். ஏழைகளையும், விஜயை தலைவராகப் போற்றும் ரசிகர்களையும் குறிக்கோளாக வைத்து ஓப்பனிங் சாங்கினை "சொன்னா புரியாது! சொல்லுக்குள் அடங்காது நீங்கள் எல்லாம் வைத்த பாசம்...." என்று கொடுத்திருப்பதை விடுத்து முற்று முழுதாக ஜனரஞ்சக அந்தஸ்தினை மையமாக வைத்து படத்தினை நகர்த்தியிருக்கலாம். அது விஜய் அவர்களுக்கு இன்னும் பலமாக அமைந்திருக்கும்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், M.ராஜா அவர்களின் இயக்கத்தில், மனதைக் கொள்ளை கொள்ளும் எழுத்தாளர் சுபா அவர்களின் வசனத்தில், விஜய் ஆன்டனியின் இனிய இசையில் வெளிவந்திருக்கும் இப் படத்தில் விஜய், ஹன்சிகா, ஜெனலியா, சரண்யா மோகன், சந்தானம், இளவரசு, வையாபுரி, சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரோடு ஏனைய தமிழ் சினிமா நட்சத்திரங்களும் இணைந்து அசத்தியிருக்கிறார்கள்.  மீண்டும் ஓர் திருபாச்சியினை நினைவுபடுத்தும் வண்ணம் படத்தில் அண்ணன் தங்கை பாசம் விரவியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் காமெடிகளால் ஹன்சிகா, சரண்யா, விஜய் ஆகியோர் தூள் கிளப்பியிருந்தாலும், சந்தானம் களமிறங்கும் போது காமெடிகள் சூடு பிடிக்கின்றது. படத்தில் இடம் பெறும் பாதிக் காட்சிகள் சந்தானம் ஒரு ஹீரோவிற்கு நிகரான நிலையில் வைத்து நோக்கப்படும் அளவிற்கு காமெடிகளால் அவரின் செயல்களுக்கு உரமூட்டியிருப்பது சந்தானத்தின் காமெடியின் தரத்தினைப் பறை சாற்றி நிற்கிறது எனலாம். ஹன்சிகா கொஞ்சம் ஓவரா வெட்கப்பட்டு இயல்பான யதார்த்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விறு விறுப்பான கதை அதே வேளை வேகமான நகர்வினை இயக்குனர் எம்.ராஜா அவர்கள் அசாத் படத்திலிருந்து மாற்றியமைத்து கையாண்டிருக்கிறார். இது இப் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். அதே வேளை சண்டைக் காட்சிகள் படத்திற்குப் பக்க பலமாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் ஸ்டண்ட் சில்வா அவர்கள் சிறப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார். அச்சமூட்டும் ஆங்கிலத் திரைப்படங்களைப் போன்று பார்க்கும் போது கண்களை மூடி விழிக்கச் செய்யும் கொடூரமான சண்டைக் காட்சிகள். வாளால் வெட்டிக் கொலை செய்யும் காட்சிகளை சைனீஸ் ஆக்‌ஷன் படங்களுக்கு நிகராகப் புகுத்தியிருக்கிறார்கள். பாடல்கள், கலை, மற்றும் எடிற்றிங் என்பன பிரமாதமாகப் படத்திற்குப் பங்களிப்பு நல்கியிருக்கிறது.
நீண்ட நாட்களாக விஜய் படத்தினை வைத்து கலாய்ப்போர், "ஓவராப் பேசினாய் குருவி படத்தை பார்க்க வைத்து கொன்று விடுவேன்" என்று சொல்லுவோரைச் செவிமடுத்தவர்களாக விஜய் அவர்களும் இயக்குனர் எம்.ராஜா அவர்களும் விஜயின் தங்கை சரண்யா மோகன் சமைத்த தரங் குறைவான உணவினை பலவந்தப்படுத்தி ஏனையோரை உண்ண வைத்து சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஹன்சிகா சேலையில் வந்து கவர்ச்சியூட்டி, "முழச்சு மூன்று இழையே விடலை' பாடலில் குட்டி நமீதா தமிழகத்திற்கு உருவாகப் போகின்றார் என்பதனை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார். பாடல்களில் மயக்காதே மச்சினா! நீ காதல் பேசும் மன்னனா" பாடலில் பிரமாண்டமான கிராபிஸ் காட்சிகளை பேக்ரவுண்டில் புகுத்தி கலையில் அசத்தியிருக்கிறார் மிலன் அவர்கள்.

நீண்ட காலமாக காப்பி பேஸ்ட் மீயுசிக் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வந்த விஜய் ஆன்டனி அவர்கள் முற்று முழுதாக வேலாயுதம் இசையில் கவனம் செலுத்திப் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். நீண்ட காலத்தின் பின்னர் விஜயிற்கு ஏறுமுகமாக இப் படம் அமையும் என்பதற்கு சான்றாக ஒவ்வோர் காட்சியமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார் படக் குழுவினர்.  வேலாயுதம் கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் திருப்பாச்சி, சிவகாசி ஸ்டைல் மீண்டும் விஜய் படங்களில் வந்து கொள்வதனை தவிர்த்திருக்கலாம். விஜய் அறிமுகமாகும் போதும், சிக்ஸ் பேக் உடல் காட்டி விஜய் சண்டை செய்யும் போதும், "சொன்னா புரியாது! சொல்லுக்குள் அடங்காது பாடலின் போதும் விசில் சத்தம் காதை பிளக்கிறது. விஜய் ரசிகர்களின் திருப்தியினை நிறைவு செய்யும் வகையில் படம் அமைந்திருக்கிறது என்பதற்குச் சான்றாக கதிரைகளை விட்டு எழுந்து நின்று ஆடிய ரசிகர்களின் ஆட்டமும், அவர்களின் முகமலர்ச்சியும் சேதி சொல்லுகின்றது. ஆனாலும் M.ராஜா அவர்கள் கொஞ்சம் வெரைட்டி கூட்டியிருக்கலாம்.

வேலாயுதம்: தளபதி ரசிகர்களுக்கு கமர்சியல் ஹிட்! நடு நிலையான விமர்சகர்களுக்கு அரைத்த மாவை மீண்டும் அரைக்கும் தமிழ் சினிமாவின் அதே சாயல்!

1 comment:

my blog recent